செவ்வாய், 20 செப்டம்பர், 2016

http://theesudum.blogspot.com/



தமிழ்த்தேசத்தின் மெய்யியல் வறுமை





எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்பொருள் காண்பதே அறிவு என்பார் திருவள்ளுவர். அதுவே தமிழர் மரபு. தமிழ்த்தேச விடுதலைக் களத்திற்கான மெய்ப்பொருள் காண்பதே தற்கால அரசியல் ஊழியர்களின் முதற்பணி . அதனை ஆற்றுவதற்கு ஓர் அறைகூவலாகவே இக்கட்டுரை அமைகிறது. தமிழ்த்தேச விடுதலை அரசியலில் மெய்யியல் முயற்சிகள் என்பவை ஊர்கூடித்தேரிழுக்கும் முயற்சி.

தமிழ்த்தேசத்தின் அரசியல் குழாம்களில் மிகப்பெரும் மெய்யியல் வறுமை நிலவுவதாகத்தோன்றுகிறது. பதிப்பகங்கள் அதிகளவில் பெருகியிருக்கின்றன. வாயில் நுழையாத பெயர்கள் கொண்ட உலக எழுத்தாளர்கள் தொடர்ந்து தமிழ்மொழிபெயர்ப்பாளர்களால் தமிழுக்குக் கொணரப்படுகிறார்கள். மெய்யியல் வகைமைகளைப் பற்றிய பொது அறிவு ஓங்கியிருக்கிறது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்லுகிற அறிவு நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. ஆனால், தமிழ்த்தேச அரசியலின் முற்போக்காளர்களிடம் விடுதலைச் சிந்தனை இன்னமும் வேர்விட்டபாடில்லை. தோழர் தமிழரசன் மறைந்து முப்பதாண்டுக்காலம் ஆகிவிட்ட சூழலில் அவரின் கட்சிசார்ந்த ஆவணங்கள் இப்போது இளைஞர்களின் கைகளுக்குக் கிடைக்கின்றன. அவரின் செயற்பாடுகள் குறித்த தேடல்கள் அதிகமாகியிருக்கின்றன. நேர்மறையாகப் பார்த்து மிகையுணர்ச்சியுடன் மகிழ நிறைய உண்டு என்றாலும் என் மனத்தில் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் மெய்யியல் வறுமை தலைவிரித்தாடுவதாகத் தோன்றுகிறது. என் உணர்வு தவறாகப் போய்விட மிகவும் அரிதான வாய்ப்புகளே உள்ளன.

விடுதலைச் சிந்தனையா? சலுகைச் சிந்தனையா ?


தமிழ்த்தேசம் இந்தியாவிடம் அடிமைப்பட்டிருக்கிறது என்ற மிக எளிய உண்மையை இன்று அரசியல் குழாமில் பலர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் விடுதலைச் சிந்தனையை தம் மூளைக்குள் அனுமதிக்க முடியாத அளவுக்கு ஒரு வகை அரிதான அறிவுநோயால் தாக்கம்கொண்டிருக்கின்றனர். அந்நோய் சலுகை அரசியலால் தலைமை தாங்கப்பட்ட பெரியாரிய அம்பேத்கரிய ஊழியால் உருவானதாகச் சொல்வது பலரால் ஏற்கப்படவில்லை. தமிழ்த்தேசிய அரசியல் குழாமில் உள்ளவர்களுக்குக் கூட தமிழ்த்தேச விடுதலைச் சிந்தனை ஏன் வெடித்துக்கிளம்பாமல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. செயற்பாடுகளால் நாம் விடுதலை வீரர்களாக இருக்க முடியவில்லையாயினும் அதன் முதற்படியாக சிந்தனையிலேனும் ஓரடி முன் நகர நம்மில் பலரால் ஏன் முடியவில்லை ? நம் மூளையின் முடிச்சுகளில் என்ன கோளாறு ? அடிமைச் சிந்தனையை இழக்காமல் நம்மால் அடிமை விலங்கை ஒடிக்க முடியுமா? அடிமைச் சிந்தனையை இழக்கவேண்டுமெனில் மெய்யியல் துறையில் சில ஆழமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படவேண்டியிருக்கின்றன என்றே தோன்றுகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டும் தொடர்ந்து சிக்கலாகிக்கொண்டிருக்கும் நமது தமிழ்த்தேசப் போராட்டக் களத்தில் தொடர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளும் , தகவமைத்துக்கொள்ளும் ஒரு மெய்யியல் முன்வைப்பு இன்னமும் எவராலும் வைக்கப்படவில்லை. தோழர் தமிழரசனின் அறிக்கைகள் தீப்பொறிகளாக நம்முன் சுடர்விடுகின்றன. நாம் இத்தீப்பொறிகளிலிருந்து ஓர் எரிமலையை உருவாக்கவேண்டுமெனில் கண்துஞ்சாது மெய்சோராது மனம்சலிக்காது மெய்யியல் பெருவெடிப்பை நிகழ்த்தவேண்டும். இதனைச் செய்ய தீ சுடும் கட்டுரைகள் பயனாகும் என நம்புகிறேன்.

பெரியாரியம் ஒரு பார்வை


திராவிட இயக்கத்தின் மெய்யியல் தந்தையான பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறாரா இல்லையா என்பது நம்முன் உள்ள முதன்மைக் கேள்வி. அவரது பரிந்துரைகள், கொள்கைகள், வழிகாட்டுதல்கள் எந்த அளவுக்கு தமிழ்த்தேச விடுதலைக் களத்திற்கு பயனுறும் என்பதை ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டிய தேவைகள் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை. பல்வேறு காலகட்டத்தில் தமிழ்த்தேச விடுதலையை அவர் முன்மொழிந்திருந்தாலும் அவை தேச விடுதலைப் போராட்டக் களத்திற்கான அறிவிப்புகளாக இல்லாமல் அவ்வப்போதைய ஆட்சியாளர்களை மிரட்டிப் பணியவைக்கும் அச்சுறுத்தல்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன என்பர். தோழர் தமிழரசன் குறிப்பிடுவதுபோல வாய்மிரட்டல் பெரியாருக்குக் கைவந்த கலை. ஆனால், பெரியார் வெறும் வாய்மிரட்டல்காரர்தான் என்று சொல்வதும் சரியாகத் தோன்றவில்லை. மாறிவரும் ஆண்டான் அடிமை உலக முறைமையில் பெரியாரியம் பல்வேறு நுண்புள்ளிகளில் பயன்படும் என்றே தோன்றுகிறது. சாதி, மதம், பண்பாடு, மொழி என பல்வேறு களங்களில் கெட்டிதட்டிப்போன நம் கருத்தியல்களை சம்மட்டியால் அடித்துச் சோதித்துப் பார்க்கவேனும் பெரியார் பயன்படுவார் என்று துணிந்து சொல்லலாம். ஆய்வாளர்களும் ஆழ்ந்த தமிழ்த்தேச விடுதலை மெய்யியலாளர்களும் தீர்மானகரமாகவும் நுணுக்கமாகவும் பெரியாரைப் பகுத்தறிவது நமது காலத்தின் கடமை.

அம்பேத்கரியம் புதிய இந்தியத்தின் முகமா?


அம்பேத்கர் என்றவுடன் அவருடைய சாதியொழிப்பு அரசியல் நினைவுக்கு வரும் அதே வேளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனும் தமிழர்களின் அடிமை முறியும் நினைவுக்கு வருகிறது. அம்பேத்கரே புதியா இந்தியாவின் முற்போக்கு முகம் என்று பலர் நம்புகின்றனர். இந்தியாவின் நல்எதிர்காலத்திற்கு அம்பேத்கரியமே தீர்வு என்கின்றனர் அவர்கள். தேசம் என்றால் என்ன? என்ற கேள்வியை எடுத்துப்போடும் தருக்கங்களில் தமிழ்த்தேசியர் இயல்பாகவே இந்திய அரசியலமைப்புச்சட்டம் அடிப்படையில் செய்துகொண்ட தேச வரையறை மிகப் பிழையானது என உரத்துச் சொல்வது வழக்கம். இதற்கான பழியை முழுவதுமாக அம்பேத்கரின்மீது போடமுடியுமா என்பதைவிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்கான கூறுகளுக்கு அம்பேத்கர் காரணமெனச் சுட்டும் பலர் அவற்றின் பிற்போக்கான பல கூறுகளுக்கு மற்றவர்களைக் கைகாட்டுவது உண்டு. ஆனால், அம்பேத்கரின் தேசம் குறித்த பார்வைகளை ஆய்வு செய்யும் எவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒருபடித்தான இந்தியத் தேசத்தைக் கற்பிப்பதில் அவருக்குள்ள பங்கை மறுக்க முடியாது. இன்னமும் அம்பேத்கரியர்களுக்கு இந்தியாதான் தேசம். தமிழ்நாடு வெறும் பிராந்தியம்தான். மாநிலம்தான். நாம் தமிழ்த்தேசத்தவர்கள் என்றுணரும் வாய்ப்பு நாளுக்கு நாள் மிகுந்துவரும் இக்காலகட்டத்தில் இளைஞர்கள் அம்பேத்கரின் இந்தியப் பார்வையை தீர்மானகரமாக வரையறுத்துப் புரிந்து தெளியவேண்டும். அம்பேத்கரை திறனாய்வு செய்வது சாதிச் சிக்கலுக்குள் இழுத்துவிடும் என்பதால் பலரும் அதைப்பற்றி நேரடியாகப் பேச விரும்புவதில்லை. தமிழ்த்தேச மெய்யியல் களம் அம்பேத்கரியத்தை முழுமையாக உள்வாங்கி செரித்து ஆகாத இந்தியப் பார்வையை மலமாய் வெளித்தள்ளியாகவேண்டும். இதற்கான கருத்துருக்கள் மிகவும் ஆழமாக, தெளிவாக, கறாராக முன்வைக்கப்படவேண்டும். நூலில் ஆடும் பட்டம் போல நம் கருத்துக்கள் எந்தப் புறநிலையையும் முழுமையாகச் சார்ந்து இருக்க நாம் அனுமதித்தல் தகாது. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு குறித்த அவரது எழுத்துக்கள் தமிழ்த்தேச சாதி ஒழிப்புக் களத்திற்கு எந்த அளவில் பொருந்தக் கூடியன என்பது அடுத்த முதன்மையான கேள்வி. இதுகுறித்து தமிழ்த்தேசிய அரசியலாளர்கள் ஆய்ந்து தெளியவேண்டும். மெய்யியல் களத்தில் புனுகுப்பூச்சுக்கள் பயனளிப்பதில்லை. காற்றில் பரவும் கந்தக வாடைபோல நம் மெய்யியலின் மணம் திக்கெட்டும் பரவட்டும். அவற்றில் நின்று தாக்குப்பிடிக்கும் எந்த மெய்யியலுக்கும் நாம் கதவடைக்கப்போவதில்லை.

புதிய மார்க்சியம்


மார்க்சியத்தின் பல்வேறு உலக வகைமைகள் குறித்த உரையாடல்களும் தமிழ்த்தேச விடுதலைக் களத்தில் நிகழ்ந்தாகவேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் * உலக மானுடம் என்ற அடிப்படை முரண் எழுந்து பேருருக்கொண்டு வரும் நமது காலத்தில் மார்க்சியத்தின் ஆழ்ந்த ஆய்வுகள் தேவை. அதற்கான பார்வைகள் தமிழ்த்தேச விடுதலை அரசியலோடு இணைக்கப்பட்டு பண்படுத்தப்படவேண்டும். தோழர் தமிழரசனின் பின்னாளையத் தளபதியான தோழர் இலெனின் அறிவியலும் தொழில்நுட்பமும் வளரவளர உலக மானுடத்தின் துயர் மிகும் என முன்னூகித்த கதையை நாம் அறிவோம். சமவுடமைப் புரட்சிக்கு முன் உலக முதலாளியம் பன்னாட்டு நிறுவனச் சுரண்டல்மூலம் இந்த நிலவுலகை நாம் வாழத்தகுதியற்றதாய் மாற்றிவிடக்கூடும் என்று நாம் உறுதியாய் நம்புகிற அளவில் நாளும் நாசங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. விடுதலை அரசியலில் மார்க்சு இல்லையெனில் வரலாற்றில் தமிழ்த்தேச விடுதலைக்கு பொருள் ஏதும் இல்லை. ஆயினும், மரபான மார்க்சியம் கூறுவதுபோல உற்பத்தியின் அடுத்த கட்டத்திற்கு மானுடப் பொருளியலை நகர்த்துவதை முதன்மை நோக்கமாக இனியும் நாம் கொண்டிருத்தல் ஆகாது. வெறிகொண்ட நுகர்வை, இலாபவேட்கையின் பேருற்பத்தியைத் தடுத்தாட்கொள்ளும் எந்த பொருளியல் மெய்யியல் பார்வையும் நாம் தேடிக்கண்டடையக் கூடலாம். வள்ளுவப் பொருளியலை மீண்டும் தூசிதட்டி எடுத்து உரையாடல்களைத் தொடங்கலாம் தவறில்லை. காய்தல் உவத்தலின்றி மார்க்சியத்தின் வெற்றிதோல்விகளை எடைபோட்டு ஒரு புதிய மார்க்சியப் புரிதல்களை தமிழ்த்தேச விடுதலைக் களம் உருவாக்கியாகவேண்டும். இதற்கான தொடக்கப் படிக்கட்டுகளைக் கூட கண்ணுக்கெட்டும் வரை நாம் காணக் கூடவில்லை.

தமிழ்த்தேச விடுதலை அரசியலின் மெய்யியல் முகப்பில் தோன்றும் மூன்று வாயில்களைக் குறித்தும் பேசியாகிவிட்டது. இன்னமும் பேசுவதற்கு நூற்றுக்கணக்கான வாயில்கள், திறப்புகள் உள்ளன. அடுத்தடுத்து பேசியாகவேண்டும் .

எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளா எனச் சல்லடையிட்டுச் சலித்தெடுப்பதில் சோர்விலாத அனைவரும் வருக ! தமிழ்த்தேச விடுதலை அரசியலின் மெய்யியல் வறுமையை கூடியமட்டும் விரட்ட முயல்வோம்.
-------------